#01 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

தமிழில் மொழிபெயர்ப்பு: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

**

ஸ்ரீகனகதாஸர் - ஒரு அறிமுகம்

ஸ்ரீவ்யாஸராஜரால் துவக்கப்பட்டு இன்று வரை வந்திருக்கும் ஹரிதாச சாகித்ய பரம்பரையில், கனகதாசரின் பங்கு என்ன என்பதை, அவரது கிருதிகளை மற்றவர்களின் கிருதிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தால் தெரிய வரும். மற்ற ஹரிதாசர்களைப் போலவே இவரும் மாத்வ தத்வத்தை பரப்பி, பக்தி சாதனை செய்திருப்பதே இவரது பங்கு / சாதனை ஆகும். இப்படி மாத்வ மத தத்வங்களை பின்பற்றிய ஹரிதாசர்கள் ஸகுணபக்தர்கள் எனலாம். 

அவர்களின்படி ஸ்ரீஹரியே சர்வோத்தமன். ஸ்வதந்த்ரன். குணாதீதன். தோஷங்கள் அற்றவன். ஸர்வவியாப்தன். ஸர்வஷக்தன். ப்ராக்ருத தேகம் இல்லாதவன். இந்த ஜகத் ஸத்யம். பஞ்சபேதங்கள் உண்மை. ஸ்ரீஹரி பிம்பரூபி. ஜீவர்கள் பிரதிபிம்பர்கள். வாயுதேவர் பரமகுருகள். இப்படியாக அனேக தத்வங்கள், சித்தாந்தத்தின் முக்கிய கருத்துகளை அனைத்து ஹரிதாசர்களின் கிருதிகளிலும் பார்க்கலாம். 

கனகதாசர் முதலில் ஸ்ரீவைஷ்ணவ தத்வங்களை ஒப்புக்கொண்டு, பின்னர் ஸ்ரீவியாசதீர்த்தரின் சம்பந்தம் பெற்று, அவரின் சிஷ்யத்வத்தைப் பெற்று, அங்கித, தீக்‌ஷைகளைப் பெற்று, மாத்வ மத தத்வங்களை பின்பற்றத் தொடங்கியிருக்கலாம். மாத்வ மதத்தின் குருகளான ஹனும பீம மத்வர்களைப் பற்றி கனகதாசர் பரமபதவீவ குருமுக்யபிராண, எஷ்டு பொகளலி நாம ஆகிய கிருதிகளில் பாடியிருப்பதைப் பார்க்கிறோம். 

தனு நின்னது ஜீவன நின்னது - என்று ஜீவர்களின் தத்த ஸ்வாதந்த்ர்யத்தைப் பற்றி சொல்கிறார். ஹரியின் சர்வோத்தமத்தைப் பற்றி அவரது பல்வேறு கிருதிகள் இருக்கின்றன. ஸ்ரீஹரி சர்வவியாப்தன் என்பதை: எல்லிருவனோ ரங்க எம்ப சம்ஷய பேடா என்று பாடுகிறார். 

இப்படியே ஹரி நாம மகிமை, ஹரி ஸ்மரணை, ஹரிகீர்த்தனை, வந்தனை, ஆத்மசமர்ப்பணம் ஆகியவை ஸ்ரீகனகதாசரின் கீர்த்தனைகளில் அதிகமாக காணப்படுகின்றன. ஹரிதாஸ்யத்தின் மேல் அவருக்கு உள்ள விருப்பத்தை, அனைவரும் தினமும் பாராயணம் செய்யக்கூடிய ‘ஈச நின்ன சரண பஜனெ’ என்னும் கேசவ நாமத்தில் பார்க்கலாம். பஞ்சபாவங்கள் எனப்படும் தாஸ்ய, சக்ய, மதுர, வாத்ஸல்ய மற்றும் ஷாந்த பாவங்களில் கனகதாசர் பல்வேறு கிருதிகளை இயற்றியுள்ளார். 

மற்ற ஹரிதாசர்களைப் போலவே கனகதாசரும் தம் பக்தி சாதனைக்கு ராமாயணம், மஹாபாரதம், பாகவதங்களிலிருந்து கதைகளை எடுத்து விளக்கியிருந்தாலும், மக்கள் புகழுமாறு அவற்றிற்கு ஒரு புது அர்த்தத்தையே அவர் விளக்கினார் எனலாம். உதாரணத்திற்கு: பொம்பெயாடவனாடிதே மஹாபாரதத என்னும் கிருதி. இதிலிருந்து கனகதாசர் ஒரு சிறந்த கவி, தர்க்கம் செய்பவர் என்பதை அறியலாம். அனைத்து பிரச்னைகளுக்கும் ஸ்ரீகிருஷ்ணனையே அபராதி (குற்றவாளி) என்ற இடத்தில் நிறுத்தி அவன் மகிமைகளை பாடுகிறார். இதுவே நிந்தாஸ்துதி என்று சொல்லப்படுகிறது. 

கனகதாசர் பல தீர்த்த க்‌ஷேத்திரங்களை தரிசித்து, அங்கு இருக்கும் க்‌ஷேத்திர மூர்த்திகளைப் பற்றி பாடியிருக்கிறார். ஹரிதாச சாகித்யத்தில் இந்த க்‌ஷேத்ர, க்‌ஷேத்ர மூர்த்திகளின் வர்ணனையை பாடுவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகியிருக்கிறது. திருப்பதி, பேலூர், மேலுகோடெ, ஸ்ரீரங்கபட்டண, உடுப்பி - இவையே கனகதாசர் தரிசித்த முக்கியமான க்‌ஷேத்திரங்களாகும். 

இவற்றில் உடுப்பி கனகதாசரின் பக்தி ஜீவனத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கனகதாசர் தம் வாழ்க்கையில் பல்வேறு ஆண்டுகளை உடுப்பியில் கழித்திருக்கிறார். அங்கிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் அவரின் பக்திக்கு மெச்சி, அவருக்கு அங்கு தரிசனம் அளித்தான் என்று சொல்லப்படுகிறது. அதுவே ‘கனகன கிடிகி’ என்று இன்றும் அனைவரும் தரிசனம் செய்யும் வழியாக இருக்கிறது. 

கனகதாசர் மோஹனதரங்கிணி, ராமதான்ய சரிதெ, நளசரித்ரெ, ஹரிபக்திசார ஆகியவற்றை இயற்றி, அதன்மூலம் ஹரிதாசர்களின் பக்தி மார்க்கத்தை விளக்கியிருக்கிறார். 

மோஹன தரங்கிணியில் த்வாரகையின் வர்ணனை, கிருஷ்ண ருக்மிணிகளின் வர்ணனை ஆகியவற்றில் அவரது பக்தி பாவம் நன்கு வெளிப்படுகிறது.  

கீர்த்தனைகளில் கனகதாசரின் இந்த கவி மனோபாவம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது ஆத்ம அனுபவங்களை மிகவும் அழகாக பல்வேறு கிருதிகளில் விளக்கியிருக்கிறார். இதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்லலாம். 

கனகதாசர் பிராமணர் அல்லாதவர். சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து, அவர்களுடன் நன்கு பழகியவராகையால், மற்ற ஹரிதாசர்களை ஒப்பிட்டால், இவரது சமூக, நீதி கருத்துகள் மிகவும் புரட்சிகரமானவையாக இருக்கின்றன. சமூக நீதி, சம நிலை, அவற்றின் முன்னேற்றம் ஆகியவற்றை அவரது கிருதிகளில் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். ஜாதி மதங்களின் பேச்சு வந்தாலே, கனகதாசர் கோபம் கொண்டு வார்த்தைகளில் விளையாடுகிறார். ஆத்மா யாவ குல? ஜீவ யாவ குல? என்று கேட்கிறார். 

நீ மாயெயொளகோ நின்னொளு மாயையோ? மற்றும் பல பாடல்களின் மூலமாக, மக்களின் அஞ்ஞானத்தை கண்டித்து, அவர்களை பக்தி மார்க்கத்தில் திருப்ப முயல்கிறார். 

பொதுவாக ஹரிதாச சாகித்யத்தில், பக்திக்கு புரந்தரதாசர், ஞானத்திற்கு ஜகன்னாததாசர், வைராக்கியத்திற்கு கனகதாசர் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆனால், கனகதாசரின் கிருதிகளில் பக்தி ஞான வைராக்கியங்கள் மூன்றும் அதிகமாகவே காணப்படுகின்றன. 

தொரெது ஜீவஸபஹுதே ஹரி நின்ன சரணவ - ஆகிய கிருதிகள் அவரது பக்திக்கு சாட்சி. ஒளகண்ணினிந்தலெ தேவர நோடண்ணா - ஆகியவை அவரது ஞானத்திற்கும் சாட்சியாக சொன்னால், அவரது வாழ்க்கையையே வைராக்கியத்திற்கு உதாரணமாக சொல்லலாம். அவருக்குக் கிடைத்த புதையலை கொப்பர தேவாலயத்திற்கு காணிக்கையாகக் கொடுத்தது, மனைவி, தாய் இவர்களின் மரணத்தால் வந்த வைராக்கியம், போர்க்களத்தில் பார்த்த ரத்தம், மரணங்களால் வந்த வைராக்கியம் என பல உதாரணங்களை சொல்லலாம். 

இப்படி ஞான, பக்தி, வைராக்கியங்களைக் கொண்டு பல்வேறு கீர்த்தனைகளை இயற்றி, காவியங்களை படைத்து, ஹரிதாச சாகித்யத்திற்கு மட்டுமல்ல. கன்னட சாகித்யத்திற்கே ஒரு கைவிளக்காக, வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய ஆழமான கருத்துக்களை கவிதை வடிவில் இயற்றி, மனிதகுலத்திற்கே ஒரு ஆதர்ச நாயகனாக இருக்கிறார். புரட்சிக்காரராக இருக்கிறார். 

ஆகையாலேயே, வியாசராயர் போன்ற யதிகள், மடாதிபதிகள் அந்த காலத்தில் கனகதாசரை ஆதரித்தார். கௌரவித்தார். புரந்தரதாசர் ‘இவகெ நாடெல்ல ஹுடுகிதரூ ஈடார காணே’ என்று புகழ்த்து பாடினார். இப்படி ஒரு ஆளுமையாக தானும் வளர்ந்து, ஒரு பரம்பரையையே துவக்கி வளர்த்த கனகதாசர் தம் காவிய சக்தியினால் அதற்கு தேவையான சக்தியையும் கொடுத்திருக்கிறார். 

***

Comments

Popular posts from this blog

#03 - சந்தி 1 - பத்யங்கள் 1,2,3,4 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

#02 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி